உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தது பாகிஸ்தான் அணி
|ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க 7 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் பாகிஸ்தான் அணி கால் பதித்துள்ளது.
ஐதராபாத்,
இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் இழுபறி நீடித்தது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்குவதில் கால தாமதம் செய்வதாகவும், இது உலகக் கோப்பை போட்டிக்கு தங்கள் அணி தயாராவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்தது.
இந்த சூழலில் விசா பிரச்சினை நேற்று தீர்ந்தது. ஆனால் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் அவர்களுக்கு 'விசா' கிடைத்தது.
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இந்தியா வந்துள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான அணி நேற்று தங்களது தாய் நாட்டில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றடைந்தனர். அங்கு இரவு தங்கி விட்டு இன்று மதியம் துபாயில் இருந்து புறப்பட்டு நேரடியாக ஐதராபாத் விமான நிலையம் வந்தடைந்தனர். பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடைசியாக 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக பாகிஸ்தான அணி இந்தியா வந்தது. அந்த தொடரில் பாபர் அசாம் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் தற்போது முதல் முறையாக பாபர் அசாம் இந்தியாவில் விளையாடுகிறார்.
பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் வரும் 29ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 2வது பயிற்சி ஆட்டத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இதனை அடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் வரும் 6-ஆம் தேதி நெதர்லாந்தை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் (c), ஷதாப் கான், பகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது அப்ரிடி வாசிம்.