'பாகிஸ்தான் அரசு தன் நாட்டு மக்கள் குறித்து கவலைப்பட வேண்டும்' - மத்திய மந்திரி கிஷன் ரெட்டி
|காஷ்மீர் குறித்து பேச பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை என்று மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டம், ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் சர்வதேச மையத்தில் நேற்று தொடங்கியது. இன்று இந்தக் கூட்டத்தில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. தனது மக்கள் பலனடைய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை மத்திய அரசு செய்யும். காஷ்மீர் குறித்து பேசுவதற்கு பாகிஸ்தான் யார்? அந்த நாட்டிற்கு என்ன அதிகாரம் உள்ளது?
பாகிஸ்தானில் மக்கள் உணவின்றி உயிரிழக்கிறார்கள். அவர்களுக்கு அரசியோ, எரிவாயுவோ கிடைப்பதில்லை. அது குறித்து பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான் என்ன கூறுகிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. காஷ்மீர் குறித்து பேசுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் அரசு தன் நாட்டு மக்கள் குறித்து கவலைப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் ஜி20 கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் தொடர் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஸ்ரீநகரில் ஜி20 கூட்டத்தை நடத்துவது 'சர்வதேச சட்டத்தை மீறும் செயல்' என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.