பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்; ராஜ்நாத் சிங்
|இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இருக்கும் என ஜம்முவில் இன்று பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம் செயல்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த, இருக்கின்ற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், வருங்காலத்திலும் தொடர்ந்து இந்தியாவுடனேயே இருக்கும் என்று கூறியுள்ளார். பாபா அமர்நாத் (கடவுள் சிவனின் வடிவம்) இந்தியாவில் இருக்கும்போது, மா சாரதா சக்தி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எப்படி இருக்க முடியும்? என அவர் கேட்டுள்ளார்.
இந்து கடவுளான சரஸ்வதி சாரதா எனவும் அழைக்கப்படுகிறது. சாரதா பீடம் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், சூறையாடப்பட்ட இந்து கடவுளான சரஸ்வதியின் கோவிலை பற்றி குறிப்பிட்டு உள்ளார்.
ஒரு வலிமையான மற்றும் நம்பிக்கையான புதிய இந்தியா போதிய அம்சங்களுடன் உள்ளது. தீங்கான கண்ணோட்டம் கொண்டுள்ள எவர் ஒருவருக்கும் சரியான பதிலடி தரப்படும். இந்தியாவை சர்வதேச அளவில் ஒரு சூப்பர்பவர் நாடாக ஆக்குவது என்பது, நமது மறைந்த வீரர்களுக்கான சரியான அஞ்சலியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.