< Back
தேசிய செய்திகள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது; அதை எடுத்துக் கொள்வோம் - அமித்ஷா

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது; அதை எடுத்துக் கொள்வோம் - அமித்ஷா

தினத்தந்தி
|
15 May 2024 9:12 AM GMT

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்றும் அமித்ஷா கூறினார்.

கொல்கத்தா,

பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் உள்ள செராம்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் போராட்டம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"2019-ம் ஆண்டு 370-வது சட்டபிரிவை மத்திய அரசு ரத்து செய்த பிறகு காஷ்மீரில் அமைதி திரும்பியது. ஆனால் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்களை நாம் காண்கிறோம். முன்பு காஷ்மீரில் கேட்ட அதே கோஷங்கள் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கின்றன.

முன்பு காஷ்மீரில் கற்கள் வீசப்பட்டன, இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கற்கள் வீசப்படுகின்றன. மணிசங்கர் ஐயர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள், பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் நாம் எதையும் செய்யக்கூடாது என்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம்.

'இந்தியா' கூட்டணியின் ஊழல் தலைவர்களுக்கும், நேர்மையான அரசியல்வாதியான நரேந்திர மோடிக்கும் இடையே மக்களவை தேர்தல் நடக்கிறது. முதல்-மந்திரியாக இருந்தபோதும், பிரதமராக இருக்கும்போதும் மோடி மீது ஒரு பைசா அளவிற்கு கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை.

ஊடுருவல்காரர்கள் வேண்டுமா அல்லது அகதிகளுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம்(சி.ஏ.ஏ.) வேண்டுமா என்பதை மேற்கு வங்காள மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஜிகாத்துக்கு வாக்களிக்க வேண்டுமா, அல்லது வளர்ச்சிக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை மேற்கு வங்காளம் முடிவு செய்ய வேண்டும். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சி.ஏ.ஏ.வை எதிர்த்து, தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்த ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக பேரணிகளை நடத்துகிறார்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்