பாகிஸ்தானை சேர்ந்த அக்காள்-தம்பிக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட முடியாது
|பாகிஸ்தானை சேர்ந்த அக்காள், தம்பிக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட முடியாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு:
பாகிஸ்தானை சேர்ந்த அக்காள், தம்பிக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட முடியாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்தவருடன் திருமணம்
பெங்களூருவை சேர்ந்தவர் அமீனா. இவர், பாகிஸ்தானை சேர்ந்த ஆசாத் மல்லிக்கை கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு 17 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். இதற்கிடையில், கடந்த 2014-ம் ஆண்டு தனது கணவர் ஆசாத் மல்லிக்கை அமீனா விவாகரத்து செய்துவிட்டு பெங்களூருவில் வசிக்கும் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
இதையடுத்து, தனது பிள்ளைகளையும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு அமீனா நடவடிக்கை எடுத்திருந்தார். இதற்காக துபாயில் உள்ள இநதிய தூதரகம் மனிதாபிமான அடிப்படையில் அக்காள், தம்பிக்கு தற்காலிக பாஸ்போர்ட்டு வழங்கி இருந்தது. அதே நேரத்தில் அமீனா தனது 2 குழந்தைகளுக்கும் இந்திய நாட்டு குடியுரிமையை பெற முயன்றார்.
இந்திய குடியுரிமை கேட்டு மனு
இதற்காக இந்திய தூதரகத்திடமும், உள்துறை அமைச்சகத்திடமும் குழந்தைகளுக்கு குடியுரிமை கேட்டு அமீனா விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பாகிஸ்தான் நாட்டு அரசு 2 பேருக்கும், 21 வயது நிறைவு பெறும் வரையில், இங்குள்ள குடியுரிமையை கைவிட முடியாது என்று கூறி இருந்தது. அமீனா தனது குழந்தைகளுக்கான பாகிஸ்தான் பாஸ்போர்ட்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்காததால், இந்திய குடியுரிமை வழங்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து, தனது குழந்தைகளுக்கு இந்திய நாட்டு குடியுரிமை வழங்க உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் அமீனா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்றது.
உத்தரவிட முடியாது
இந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது இந்திய சட்டத்தின்படி சிறார்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு பெற்றோர் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். அதையும் மீறி சிறார்களுக்கு குடியுரிமை வழங்க உள்துறையிடம் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சிறார்களுக்கான பாகிஸ்தான் குடியுரிமையை துறக்க, அந்த நாட்டு அரசு மறுத்து இருக்கிறது.
எனவே இந்திய சட்டத்தின்படி நமது நாட்டு குடியுரிமையை சிறார்களுக்கு வழங்குவதற்கு உள்துறை அமைச்சகத்துடன் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் 2 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட முடியாது. அவர்கள் பாகிஸ்தான் குடிமக்களாகவே கருதப்படுவார்கள் என்று தீர்ப்பு கூறியுள்ளார்.