இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்..!!
|பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை அந்நாட்ட்ய் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த மே மாதம் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அம்மாதம் 8 மற்றும் 9-ந் தேதிகளில் பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தை அவமதித்த வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பவாத் சவுத்ரிக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது. இம்ரான் கான் மற்றும் பவாத் சவுத்ரி தனிப்பட்ட முறையில் சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முன் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக பிடிஐயின் பல தலைவர்கள் மீது அவமதிப்பு வழக்குகள் தொடங்கப்பட்டன. அவர்களுக்கு எதிராக பல நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட போதிலும், கட்சித் தலைவர்கள் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முன் ஆஜராகவில்லை. இதனைத்தொடர்ந்து பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் இரண்டு பேரும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகாததால், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.