< Back
தேசிய செய்திகள்
பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கையில்  காஷ்மீர் விவகாரம்: இந்தியா கண்டனம்
தேசிய செய்திகள்

பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கையில் காஷ்மீர் விவகாரம்: இந்தியா கண்டனம்

தினத்தந்தி
|
14 Jun 2024 2:25 AM IST

பாகிஸ்தான்-சீனா சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் காஷ்மீர் விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

புதுடெல்லி,

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த 7-ந்தேதி சீனாவுக்கு சென்று அந்த நாட்டின் பிரதமர் லி கியாங்கை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து இருநாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் காஷ்மீர் விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், காஷ்மீர் பிரச்சினை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி முறையாகவும் அமைதியாகவும் தீர்க்கப்பட வேண்டும் என சீனா வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கையில் காஷ்மீர் பற்றி குறிப்பிடப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

ஜூன் 7 அன்று வெளியிடப்பட்ட சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டறிக்கையில் காஷ்மீர் யூனியன் பிரதேசம் பற்றிய தேவையற்ற குறிப்புகளை நாங்கள் அறிந்தோம். அத்தகைய குறிப்புகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்த பிரச்சினையில் எங்களின் நிலைப்பாடு நிலையானது. சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு (பாகிஸ்தான்) அது நன்கு தெரியும். காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருந்து வருகின்றன. வேறு எந்த நாடும் இதை பற்றி கருத்து தெரிவிக்க உரிமை இல்லை.

அதே கூட்டறிக்கையில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில பகுதிகள் இந்தியாவின் இறையாண்மை பிரதேசத்தில் பாகிஸ்தானால் வலுக்கட்டாயமாக மற்றும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இடையூறு விளைவித்து, இந்தப் பிரதேசங்களில் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை வலுப்படுத்த அல்லது சட்டப்பூர்வமாக்குவதற்கு மற்ற நாடுகளின் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம் மற்றும் நிராகரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்