பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர் சுட்டுக்கொலை
|பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் அபோஹர் செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்றவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெரோஸ்பூர்,
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அபோஹர் செக்டார் பகுதியில் நேற்று பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் ஊடுருவ முயன்றார்.
பாதுகாப்புப் படையினர் திரும்பத் திரும்ப எச்சரித்தும் அவர் நிற்காததால் அவரை நோக்கி 3 முறை துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அந்த நபர் உயிரிழந்தார். அதை தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்புப்படையின் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்த நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த நபர் சுமார் 25 வயதுடையவர் என்றும், அவரை பற்றிய தகவல் மற்றும் பெயர் குறித்த அடையாளங்கள் தற்போது வரை தெரியவில்லை என்று பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த நபரின் பாக்கெட்டில் இருந்து சில சிகரெட்டுகள், லைட்டர் மற்றும் ஒரு இயர்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.