பத்ம விருதுகள் வழங்கும் விழா: முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் - அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்
|ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.
புதுடெல்லி,
இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 22-ந்தேதி நடைபெற்ற முதல் சிவில் விழாவில் 3 பத்ம விபூஷன், 4 பத்ம பூஷன் மற்றும் 47 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த நிலையில் இன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்று வரும் 2-வது சிவில் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி வருகிறார்.
மறைந்த முன்னாள் உத்திர பிரதேச முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதை அவரது மகனும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார். மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்ம பூஷன் விருதை வாணி ஜெயராம் சார்பில் அவரது உறவினர் பெற்றுக் கொண்டார்.
மேலும் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி ஜனாதிபதியிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.