ஓட்டல் அறையில் ரகசிய கேமரா: வீடியோ எடுத்து தம்பதியிடம் பணம் கேட்டு மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
|ஓட்டல் அறையில் வாடகைக்கு தங்கி ரகசிய கேமராவை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் அறையில் தங்கி இருந்த கணவன் - மனைவியின் அந்தரங்க காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நொய்டாவை சேர்ந்த விஷ்ணு சிங் மற்றும் அப்துல் வஹாப் ஆகிய 2 பேரும் நொய்டாவில் உள்ள பிரபல ஓட்டலில் கடந்த மாதம் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அந்த ஓட்டல் அறையில் இருவரும் சேர்ந்து பல இடங்களில் ரகசிய கேமராக்களை வைத்துள்ளனர். பின்னர், அந்த அறையை விட்டு சென்றுவிட்டனர்.
தொடர்ந்து அந்த அறையில் கணவன் - மனைவி தங்கியுள்ளனர். அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசியமாக கேமராக்கள் தம்பதி தனிமையில் இருக்கும் காட்சிகளை பதிவு செய்துள்ளது.
பின்னர், ஒரு வாரம் கழித்து விஷ்ணு சிங் மற்றும் அப்துல் வஹாப் அதே ஓட்டலுக்கு வந்து மீண்டும் அதே அறையை வாடகைக்கு எடுத்துள்ளனர். அங்கு தாங்கள் ரகசியமாக பொருத்திய கேமராக்களை எடுத்துச்சென்றனர்.
கேமராவில் பதிவான அந்த தம்பதியின் தனிமை வீடியோ காட்சிகளை கைப்பற்றி அந்த தம்பதியை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தரவில்லையென்றால் தனிமையில் இருக்கும் வீடியோக்களை ஆன்லைனில் பதிவேற்றிவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த தம்பதி இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தம்பதியின் தனிமை காட்சிகளை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய விஷ்ணு சிங் மற்றும் அப்துல் வஹாபை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஓட்டல் ஊழியர்களுக்கு தொடர்பு இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.