< Back
தேசிய செய்திகள்
மாநிலங்களுக்கு விரைவில் நிலுவைத்தொகை: தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடிதான் - நிர்மலா சீதாராமன் தகவல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மாநிலங்களுக்கு விரைவில் நிலுவைத்தொகை: தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடிதான் - நிர்மலா சீதாராமன் தகவல்

தினத்தந்தி
|
21 Dec 2022 5:20 AM IST

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி,

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடி மட்டுமே உள்ளது என்றும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17,176 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

தமிழகத்துக்கு ரூ.1,200 கோடி

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி ஆகியோர் நேற்று பதிலளித்தனர்.

அதன்படி, கடந்த ஜூன் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.17,176 கோடி நிலுவையில் இருப்பதாக பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

பின்னர் நிர்மலா சீதராமன் பேசும்போது, 'தற்போதைய நிலவரப்படி, ஜூன் வரையிலான அனைத்து நிலுவைத் தொகைகளையும் ஓரளவு செலுத்திவிட்டதால், நிலுவையில் உள்ள ரூ.17,000 கோடியும் விரைவில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஜூன் 2022-ல் நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி இழப்பீடு விவரங்கள் ரூ.1200 கோடி மட்டுமே. மாநிலத்தின் பயன்பாட்டு சான்றிதழ் கிடைக்கப்பெறாததால் அதை நிலுவை என கருத முடியாது' என தெரிவித்தார்.

ரசாயன கழிவுகள்

இதைப்போல மத்திய உரத்துறை இணை மந்திரி பக்வந்த் குபா மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் ரசாயன கழிவுகளை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய பிரதேச அரசு அனுப்பிய பரிந்துரையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறினார்.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் சேகரிக்கப்படும் நோயாளியின் தரவுகள் அவர்களது ஒப்புதல் இல்லாமல் காப்பீடு மற்றும் மருந்து நிறுவனங்கள் உட்பட வேறு எந்த நிறுவனத்துடனும் பகிரப்படாது என சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா உறுதிபட தெரிவித்தார்.

2020-21-ம் ஆண்டில் பரிசோதிக்கப்பட்ட 84,874 மருந்து மாதிரிகளில் 3 சதவீதத்திற்கு அதிகமானவை தரமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 263 போலியானவை மற்றும் கலப்படம் செய்யப்பட்டவை என்றும் சுகாதார இணை மந்திரி பாரதி பிரவின் பவார் கூறினார்.

மக்களவையில் கடந்த வாரம் நடந்த துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, நடப்பு நிதியாண்டில் ரூ.3.25 லட்சம் கோடி கூடுதல் செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது.

இதை மாநிலங்களவையில் சுட்டிக்காட்டி நேற்று உறுப்பினர்கள் மத்திய அரசை கடுமையாக சாடினர். இது ஒரு பெரிய தொகை எனவும், திட்டமிடுதலில் எவ்வாறு தவறு நிகழ்ந்தது? எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பின.

சைபர் தாக்குதல்

இதற்கிடையே மக்களவையில் நேற்று பல்வேறு துறை சார்ந்த கேள்விகளுக்கு மந்திரிகள் பதிலளித்தனர்.

அந்தவகையில் சைபர் தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு மையத்தில் சைபர் தாக்குதலோ, கம்ப்யூட்டர் முடக்க சம்பவங்களோ நடைபெறவில்லை என தெரிவித்தார்.

நக்சலைட்டு வன்முறை தொடர்பான கேள்விகளுக்கு நித்யானந்த் ராய் பதிலளிக்கையில், கடந்த 11 ஆண்டுகளில் இந்த வன்முறை சம்பவங்கள் 77 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாக கூறினார்.

அந்தவகையில் கடந்த 2010-ம் ஆண்டில் 2,213 சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், கடந்த ஆண்டு வெறும் 509 தாக்குதல்களே நிகழ்ந்திருப்பதாக அவர் புள்ளி விவரங்களை வெளியிட்டார்.

1.64 லட்சம் பேர் தற்கொலை

இதைப்போல கடந்த 2021-ம் ஆண்டு நாடு முழுவதும் நிகழ்ந்த தற்கொலை விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அடிப்படையில் மந்திரி வெளியிட்டார்.

கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு 115 தினக்கூலி தொழிலாளர்கள், 63 குடும்பத்தலைவிகள் தற்கொலையால் உயிரை மாய்த்து இருப்பதாகவும், அந்தவகையில் மொத்தம் 1,64,033 பேர் கடந்த ஆண்டில் தற்கொலை செய்திருப்பதாகவும் அதிர்ச்சித்தகவலை தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக நித்யானந்த் ராய் கூறினார்.

கூட்டுறவு மசோதா

இந்த நிலையில் கூட்டுறவுத்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 7-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

மேலும் செய்திகள்