கடந்த 5 நாட்களில் பிரஷர் ஹாரன், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பயன்படுத்திய 900 பேருக்கு அபராதம்
|டெல்லியில் கடந்த 5 நாட்களில் பிரஷர் ஹாரன், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பயன்படுத்திய 900 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி போக்குவரத்துக் காவல்துறை கடந்த 5 நாட்களில் பிரஷர் ஹாரன்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களுக்கு எதிரான சிறப்பு இயக்கத்தின் கீழ் 900-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, பிரஷர் ஹாரன்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க ஒரு சிறப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்தது. அதன்படி கடந்த சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை டெல்லியில் பிரஷர் ஹாரன்களைப் பயன்படுத்திய 583 பேர்களுக்கும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பயன்படுத்திய 354 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒலி மாசுபாட்டிற்கு எதிரான இயக்கத்தில் இந்த ஆண்டு இதுவரை 3,502 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனவரி 1 முதல், பிரஷர் ஹாரன்களுக்காக 1,331 பேருக்கும், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களுக்காக 2,009 பேருக்கும், பாடல் இசைக்கவிட்ட 113 பேருக்கும், ஒலி எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒலி எழுப்பிய 49 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.