ஆந்திராவில் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் 600 கிராமங்கள்
|ஆந்திராவில் கனமழையால் 600 கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.
அமராவதி,
நாட்டின் பல்வேறு மாநில பகுதிகள் தொடர் கனமழையால் தத்தளித்து வருகின்றன. அந்த வரிசையில், அண்டை மாநிலமான ஆந்திராவும் பெருவெள்ளத்தில் திணறிக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தின் கோதாவரி நதியில் 30 ஆண்டுகளிலேயே அதிகளவாக வெள்ளம் பொங்கிப் பாய்கிறது.
இதனால் 6 மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. அங்கிருந்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மை சிறப்பு தலைமைச் செயலாளர் சாய் பிரசாத் தலைமையிலான ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அணி, வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருகிறது. மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலா 10 அணிகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வெள்ள நிலவரம் தொடர்பாக உஷாராக இருந்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா மாநில பகுதிகளும் மழை வெள்ளத்தில் தவிக்கும் நிலையில், பத்ராத்ரி-கோதகுடம் மாவட்டங்களை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சுற்றிப் பார்க்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கான பிரிவுபச்சார விருந்தில் நேற்று இரவு தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்கவிருந்தார்.
ஆனால் அவர் டெல்லி செல்லாததுடன், மாநிலத்தில் வெள்ள பாதிப்பு குறித்து தொலைபேசி வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தெரிவித்தார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களும், நிறுவனங்களும் தாராளமாக உதவ வேண்டும், நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.