குஜராத்தில் 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மாயம்.. விபச்சாரத்துக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் !
|2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, அகமதாபாத் மற்றும் வதோதராவில் ஒரு வருடத்தில் (2019-20) 4,722 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
அகமதாபாத்
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டு உள்ளதால அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41621 பெண்கள் காணாமல் போய் உள்ளனர். இதில் 2016ல் 7,105 பெண்களும், 2017ல் 7,712 பேரும், 2018ல் 9,246 பேரும், 2019ல் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, அகமதாபாத் மற்றும் வதோதராவில் ஒரு வருடத்தில் (2019-20) 4,722 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா கூறும் போது , "சில காணாமல் போன வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் அவ்வப்போது குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுவது கண்டறியப்பட்டு உள்ளது.
இது போன்ற வழக்குகளில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதே இதுபோன்ற சம்பவம் அதிகரிக்க காரணம்.இது போன்ற வழக்குகள் கொலையை விட தீவிரமானது. ஏனென்றால், ஒரு குழந்தை காணாமல் போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள், மேலும் காணாமல் போன வழக்கை ஒரு கொலை வழக்கைப் போல கடுமையாக விசாரிக்க வேண்டும், என்றும் கூறியுள்ளார்.
முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் டாக்டர். ராஜன் பிரியதர்ஷி சிறுமிகள் காணாமல் போனதற்கு மனித கடத்தல் தான் காரணம் என்று கூறி உள்ளார்.
இது குறித்து விமர்சித்துள்ள குஜராத் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹிரென் பங்கர், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா தங்கள் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 பெண்கள் காணாமல் போனதை விட, கேரளாவில் பெண்கள் காணாமல் போனது பற்றி அதிகம் பேசுகிறார்கள்" என விமர்சித்துள்ளார்.