அசாம்: புதிதாக கட்டப்பட்ட வீட்டின் குளியலறையில் பதுங்கியிருந்த 35 பாம்பு குட்டிகள்...வீடியோ வைரல்
|குளியலறையில் பாம்பு குட்டிகள் பதுங்கி இருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கவுகாத்தி,
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டம் கலியாபோர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஒருவரது வீட்டின் குளியறையில் ஏராளமான பாம்பு குட்டிகள் இருந்துள்ளன. இந்நிலையில் குளியலறைக்கு சென்ற அவர் பாம்பு குட்டிகளை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.
பின்னர், அப்பகுதியில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர் சஞ்சிப் தேகா என்பவரை வரவழைத்து அந்த பாம்பு குட்டிகளைப் பிடித்து அப்புறப்படுத்தி, வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். குளியலறைக்குள் பாம்பு குட்டிகள் பதுங்கி இருந்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், ஒரு பெரிய பாறைக்கு அடியில் பல பாம்புகள் சுருண்டு கிடக்கும் காட்சிகள் உள்ளன. மேலும், அங்குள்ள பாறைக்கு அடியில் இருந்து பல பாம்பு குட்டிகள் வெளிவரும் காட்சிகளும் உள்ளன.
இந்த சம்பவம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர் சஞ்சிப் தேகா கூறுகையில், "பாம்புகள் இருப்பதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததையடுத்து நான் சம்பவ இடத்திற்கு சென்றேன். அந்த இடத்தில் பல பாம்புகள் ஊர்ந்து கொண்டிருப்பதை கண்டேன். அந்த வீட்டில் இருந்து சுமார் 35 பாம்புகள் மீட்டேன். பின்னர் அந்த பாம்புகளைப் பிடித்து ஜோயிசாகர் தலானி பகுதியில் விடுவித்தேன்" என்றார்.
வீட்டில் இருந்து கொத்து கொத்தாக பாம்புகள் பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.