2022-23 ஆம் ஆண்டில் 2,900 க்கும் மேற்பட்ட மருந்துகள் தரமற்றவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்
|2022-23 ஆம் ஆண்டில் போலியான மருந்துகள் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்றவை தொடர்பாக 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
2022-23 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் 89,729 மருந்துகள் பரிசோதிக்கப்பட்டதில் அதில் 2,921 மருந்துகள் "தரமானதாக இல்லை" என்றும், 422 மருந்துகள் போலியானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக பதில் அளிக்கப்பட்டது.
2022-23 ஆம் ஆண்டில் போலியான மருந்துகள் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்றவை தொடர்பாக 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மேலும் ' தரம் இல்லை' என அறிவிக்கப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட புகார்கள், விமர்சனங்கள் வைத்து சில நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முந்தைய ஆண்டில் ஒப்பிடும் போது 88,844 மருந்துகள் பரிசோதிக்கப்பட்டன, அவற்றில் 2,545 தரமானவை அல்ல என்றும் 379 போலியானது என்றும் கண்டறியப்பட்டது. போலியான / கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளை தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகித்தது தொடர்பாக 592 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அதே காலகட்டத்தில் 450 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.