கொரோனா காலத்தில் விடுவிக்கப்பட்ட 1,700 கைதிகள் டெல்லி சிறைகளுக்கு திரும்பினர்
|டெல்லி சிறைகளில் இருந்து அனுப்பப்பட்ட கைதிகளில் ஆயிரத்து 700 பேர் மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளனர்.
கடந்த கொரோனா காலத்தின்போது, சிறைகளில் நெரிசலைக் குறைக்க அங்குள்ள தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகளை அவசரகால ஜாமீன் அல்லது பரோலில் விடுவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
அதையடுத்து, ஒரு உயர் அதிகார குழுவின் பரிந்துரையின்படி சிறைக்கைதிகளை பல்வேறு மாநில அரசுகள் விடுவித்தன. அதன்படி, டெல்லியில் உள்ள திகார் உள்ளிட்ட 3 சிறைகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 600 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் மீண்டும் சிறைகளில் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும், அதன்பிறகு வழக்கமான ஜாமீனுக்கு கோர்ட்டுகளில் மனு அளிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 24-ந்தேதி அறிவுறுத்தியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வரை, டெல்லி சிறைகளில் இருந்து அனுப்பப்பட்ட கைதிகளில் ஆயிரத்து 700 பேர் மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளனர்.
டெல்லி சிறைத்துறை அதிகாரிகள் நேற்று இத்தகவலை தெரிவித்தனர்.