அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் முதன்முறையாக 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்கள்!
|அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வழித்தடங்களில் 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 43 நாள் வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 30 அன்று தொடங்குகிறது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் கமாண்டர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த வாரம் மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாதுகாப்பான யாத்திரையை உறுதிசெய்யும் வகையில், அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வாகன வழித்தடங்களில் 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், முன்னதாக, இன்று அமர்நாத் குகை லிங்கம் வரை நேரடியாக சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி விஜய் குமர் மற்றும் மூத்த எஸ்.பி. அனந்த்நாக் ஆகியோர் பார்வையிட்டனர்.
யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க பயங்கரவாத அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெடிபொருட்களைக் கண்டறிய நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும்,அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன
பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை பயன்படுத்துவதை தடுக்க பாதுகாப்புப் படையினர் அதிக எண்ணிக்கையிலான மோப்ப நாய்களை பயன்படுத்துவது இதுவே முதல் முறை. ஜெர்மன் ஷெப்பர்ட், பெல்ஜியன் மாலினோயிஸ் மற்றும் லாப்ரடோர் ஆகிய இனங்களை சேர்ந்த மோப்பநாய்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர்(சுமார் 13,000 அடி உயரம்) உயரத்தில் இமயமலையின் மேல் பகுதியில், உள்ள சிவபெருமானின் குகைக் கோயிலுக்கு அமர்நாத் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர், இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், யாத்திரை செல்லும் மக்களுக்கான தற்காலிக கூடாரங்கள் நிறுவும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.