ஜெகன் ஆட்சியில் எங்கள் தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்; தெலுங்குதேசம் குற்றச்சாட்டு
|டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக ஆந்திர பிரதேச சட்டசபையில் இந்த விவகாரங்களை ஜெகன் எழுப்ப வேண்டும் என்று தெலுங்குதேச கட்சி எம்.பி. கூறினார்.
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலர் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன என ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டாக கூறினார்.
இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஜெகன் மோகன் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கு தேச கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த 45 நாட்களில், 30-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலையே காணப்படுகிறது. தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இது கொலை முயற்சிக்கு வழிவகுக்கிறது.
490 அரசு சொத்துகள் சூறையாடப்பட்டு உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல் வழக்குகளும் பதிவாகி உள்ளன என்று கூறினார். சமீபத்திய தேர்தலுக்கு பின்னர் ஆந்திர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து உள்ளது என போராட்டத்தில் ஈடுபட்ட ஜெகன் மோகன் கூறினார்.
ஆனால், திசை திருப்பும் அரசியலில் ஜெகன் ஈடுபடுகிறார் என தெலுங்குதேசம் குற்றச்சாட்டு தெரிவித்து இருக்கிறது. இதுபற்றி தெலுங்குதேச கட்சியின் எம்.பி.க்கள் பத்திரிகையாளர் சந்திப்பை இன்று நடத்தினர்.
இதில், அக்கட்சியின் எம்.பி. நாகராஜு கூறும்போது, ஜெகன் ஆட்சியின்போது, எங்களுடைய தொண்டர்களை குறிவைத்து அவர்கள் தாக்கினார்கள் என்றார். டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக இந்த விவகாரங்களை ஆந்திர பிரதேச சட்டசபையில் ஜெகன் எழுப்ப வேண்டும் என்றும் கூறினார்.
இதேபோன்று மற்றொரு எம்.பி. பிரசாத் ராவ் கூறும்போது, ஜெகன் கூறுவது அனைத்தும் பொய். அதுபோன்ற வன்முறை எதுவும் நடக்கவில்லை. அவர்களுடைய ஆட்சியின்போது, ஆயிரக்கணக்கான படுகொலைகளும், பாலியல் பலாத்கார சம்பவங்களும் நடந்தன என்றார்.
தெலுங்குதேச கட்சி எம்.பி. அப்பல நாயுடு கலிசெட்டி கூறும்போது, எதிர்க்கட்சி தலைவராக ஆக்கப்பூர்வ பணியில் ஜெகன் ஈடுபட வேண்டும். ஆந்திர பிரதேச வளர்ச்சி பற்றி சட்டசபையில் ஆலோசனைகளை வழங்கி, அதுபற்றி விவாதிக்க வேண்டும் என கூறினார்.
எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியில் ஒய்.எஸ்.ஆர். கட்சி அங்கம் வகிக்காதபோதும், சில விவகாரங்களின் அடிப்படையில், மோடி அரசுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வழக்கம் கொண்டிருந்தது.