< Back
தேசிய செய்திகள்
ஆவின் தயிர் உறையில் இந்தி வார்த்தை: எதிர்ப்பால் சர்ச்சைக்குரிய உத்தரவு வாபஸ்
தேசிய செய்திகள்

ஆவின் தயிர் உறையில் இந்தி வார்த்தை: எதிர்ப்பால் சர்ச்சைக்குரிய உத்தரவு வாபஸ்

தினத்தந்தி
|
31 March 2023 3:12 AM IST

ஆவின் தயிர் உறையில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக்கூறிய சர்ச்சைக்குரிய உத்தரவு, எதிர்ப்பு எழுந்ததால் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டின் ஆவின், கர்நாடகத்தின் நந்தினி, கேரளத்தின் மில்மா என பல்வேறு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளுக்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில், தயிர் உறையில் தயிரைக் குறிக்கிற ஆங்கில வார்த்தைக்கு (கேர்டு) பதிலாக 'தஹி' என்ற இந்தி வார்த்தையை குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்தியைத் திணிக்கும் இந்த முயற்சி, தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதல்-அமைச்சர் எதிர்ப்பு

இதுகுறித்து டுவிட்டரில் தனது எதிர்ப்பை பதிவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். இந்தி திணிப்பை நிறுத்துங்கள் குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் இந்தியைத் திணிக்கும் இந்த செயலுக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

ஆவின் நிறுவனமும் மறுப்பு

தமிழ்நாட்டில் ஆவின் என்ற பெயரில் பால், தயர், நெய் என பால் பொருட்களை சந்தையிடுகிற தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பும், இந்தியில் 'தஹி' என்ற வார்த்தையைத் தயிர் உறையில் பயன்படுத்த மாட்டோம் என்று அறிவித்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரவு வாபஸ்

இப்படி கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து தனது உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திரும்பப்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உணவு வணிக செயல்பாட்டு நிறுவனங்கள் இப்போது லேபிளில் அடைப்புக்குறிக்குள் உள்ள பிற பிராந்திய பொதுவான பெயருடன் 'தயிர்' என்ற வார்த்தையைக் குறிக்கும் 'கேர்டு' என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்