சிறுவனை கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வேண்டும்; வனத்துறைக்கு முதல்-மந்திரி உத்தரவு
|சிறுவனை தாக்கி கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வனத்துறைக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
மைசூரு:
சிறுவனை தாக்கி கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வனத்துறைக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
சிறுவனை கொன்றது
மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் வனப்பகுதியையொட்டி ஹொரலஹள்ளி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஜெயந்த் (வயது 11). இந்த நிலையில் ஜெயந்த், பிஸ்கட் வாங்க கடைக்கு சென்றுள்ளான். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி உள்ளது. சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயந்த், அங்கிருந்து தப்பியோட முயன்றான். ஆனாலும் அதற்குள் சிறுத்தை அவன் மீது பாய்ந்து கடித்து குதறியது. மேலும் அவனை கொன்று உடலை வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது.
இதுபற்றி அறிந்ததும் கிராம மக்களும், வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஜெயந்தை சிறுத்தை தாக்கி கொன்று உடலை வனப்பகுதிக்குள் போட்டு சென்றது தெரியவந்தது. வனத்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுட்டுப்பிடிக்க...
இந்த நிலையில் மைசூருவில் சிறுத்தை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். வனத்துறையினரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே மைசூரு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், தொடர் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை சுட்டு பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சிறப்பு தனிப்படை அமைத்து கொள்ளுங்கள். சிறுத்தை அட்டகாசம் மீண்டும் அந்த பகுதியில் இருக்க கூடாது என்றார். அப்போது பேசிய வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை பிடிக்க 158 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தனித்தனியாக பிரிந்து சிறுத்தையை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினர்.