கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு
|கனமழை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை மையத்தின் சார்பில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்றைய தினம் கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை மையத்தின் சார்பில் மஞ்சள் எச்சரிக்கையும், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 8-ந்தேதி(நாளை) கேரளாவில் உள்ள கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் கனமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.