கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் ; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
|கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மங்களூரு;
கனமழை
கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மே மாதம் கோடை மழை பெய்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. சில இடங்களில் சாலையோர மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர் புகுந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக கடலோர மாவட்டங்களில் 28-ந்தேதி(நேற்று) முதல் வருகிற 30-ந்தேதி வரை ஆகிய 3 நாட்கள் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:- கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா ஆகிய பகுதிகளில் இன்று(புதன்கிழமை), நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம். மேலும் கனமழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் வடகர்நாடக மாவட்டங்களான பீதர், கலபுரகி, யாதகிரி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, கொப்பல், பெலகாவி, தார்வார் ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.