'கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதால் பிரச்சினை ஏற்பட்டால் எதிர்கட்சிகள் எங்களை குற்றம் சொல்லக் கூடாது' - திரிணாமுல் காங்கிரஸ்
|சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கொல்கத்தா,
இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்த 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், கடந்த மே 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே பெரும் சர்ச்சை ஏற்பட்டு வந்தது. இந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வந்தன.
திரைப்படம் வெளியான பிறகு, இந்த படம் பிரிவினைவாத கருத்துக்களை கொண்டிருப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேற்கு வங்கத்தில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் திரைப்படம் வெளியான மறுநாள் முதல் தியேட்டகளில் படம் ஓடவில்லை.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்காள அரசு விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், "இது மாநில அரசின் தோல்வி அல்லது வெற்றி என்ற கோணத்தில் எதிர்க்கட்சியினர் சித்தரிக்க முயலவேண்டாம். தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதன் மூலம் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் எதிர்க்கட்சியினர் எங்களை குற்றம் சொல்லக் கூடாது" என்று தெரிவித்தார்.