எமெர்ஜென்சியில் கூட இப்படி நடக்கவில்லை: பா.ஜ.க மீது சிவசேனா பாய்ச்சல்
|எமர்ஜென்சியில் கூட எதிர்கட்சியினர் இதுபோல குறிவைக்கப்படவில்லை என பா.ஜனதா மீது சிவசேனா தாக்கி உள்ளது.
மும்பை,
பத்ரா சால் மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் உள்ளார். இந்தநிலையில் சாம்னாவில் சிவசேனா கட்சி பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து உள்ளது. சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:- போலி சாட்சியங்களை தயார் செய்து அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சஞ்சய் ராவத்தை கைது செய்து உள்ளனர். தற்போது கூட சஞ்சய் ராவத் பா.ஜனதாவில் சேர்ந்தால், பா.ஜனதாவின் வாஷிங் மெஷினில் அவர் சுத்தம் செய்யப்பட்டு விடுவார்.
சஞ்சய் ராவத் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக அமலாக்கத்துறையிடம் கூறியிருந்தார். அதை பரிசீலிக்காமல் அமலாக்கத்துறை அவசர, அவசரமாக வீட்டில் சோதனை நடத்தி அவரை கைது செய்தது ஏன்?. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உண்மையை பேசுபவர்களின் நாக்கை அறுத்து, குரலை நெரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தில் கூட இதுபோல நடைபெறவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.