சீனா எல்லை விவகாரத்தில் எதிர்கட்சிகளின் ஒற்றுமை - நாடாளுமன்றத்தில் கூட்டாக வெளிநடப்பு
|காங்கிரஸ் கட்சியினரை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி,
அருணாச்சலபிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யங்ட்சி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9-ந்தேதி இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைய முற்பட்டன. இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன படைகளை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடைந்தனர்.
இந்நிலையில், இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயன்ற சம்பவம், இந்திய-சீன படைகளின் மோதல் குறித்து நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் இன்று விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
இதனையடுத்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல், இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த எதிர்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று ஆம் ஆத்மி கட்சி, சி.பி.ஐ., சி.பி.எம்., ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.பி. கட்சி, ஆர்.எல்.டி. கட்சி, மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த என்.சி.பி. மற்றும் சிவசேனா கட்சிகள், தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சி என மொத்தம் 18 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன.
இதில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வந்தாலும், தற்போது காங்கிரஸ் தலைவரின் அழைப்பை ஏற்று ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமை அரசியல் களத்தில் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.