< Back
தேசிய செய்திகள்
தாஜ்மகாலில் நடைபெறும் உருஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு - இந்து அமைப்பு ஆக்ரா கோர்ட்டில் மனு
தேசிய செய்திகள்

தாஜ்மகாலில் நடைபெறும் 'உருஸ்' நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு - இந்து அமைப்பு ஆக்ரா கோர்ட்டில் மனு

தினத்தந்தி
|
3 Feb 2024 12:35 PM IST

'உருஸ்' நிகழ்ச்சியை நடத்தும் குழுவினருக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது தாஜ்மகால். 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய இந்த தாஜ்மகால், இன்று இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

மன்னர் ஷாஜகானின் நினைவு தினத்தை முன்னிட்டு தாஜ்மகாலில் ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் 'உருஸ்' என்ற நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தாஜ்மகாலில் வரும் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 'உருஸ்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஷாஜகான் 'உருஸ்' ஒருங்கிணைப்பு கமிட்டியினர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதற்காக தாஜ்மகாலுக்குள் இலவச அனுமதியும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் தாஜ்மகாலில் 'உருஸ்' நிகழ்ச்சியை நடத்தும் குழுவினருக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும், தாஜ்மகாலில் 'உருஸ்' நிகழ்ச்சிக்காக வழங்கப்படும் இலவச அனுமதியை ரத்து செய்யக்கோரியும் 'அகில் பாரத் இந்து மகாசபை' சார்பில் ஆக்ரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் மார்ச் 4-ந்தேதி விசாரிக்கப்படும் என கோர்ட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அணில் குமார் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தாஜ்மகாலில் 'உருஸ்' நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கியது யார்? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, முகலாயர் காலத்திலோ அல்லது ஆங்கிலேயர் காலத்திலோ தாஜ்மகாலுக்குள் 'உருஸ்' நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை பதிலளித்துள்ளது.

எனவே இதன் அடிப்படையில் தற்போது தாஜ்மகாலில் 'உருஸ்' நிகழ்ச்சி நடத்தி வரும் சையது இப்ராகிம் சைதி தலைமையிலான குழுவினருக்கு தடை விதிக்கக் கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்