< Back
தேசிய செய்திகள்
சத்தீஷ்காரில் சுரங்கத்திற்கு எதிர்ப்பு; ஓட்டுநர்களை இறக்கி விட்டு லாரிகளை கொளுத்திய நக்சலைட்டுகள்
தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் சுரங்கத்திற்கு எதிர்ப்பு; ஓட்டுநர்களை இறக்கி விட்டு லாரிகளை கொளுத்திய நக்சலைட்டுகள்

தினத்தந்தி
|
31 March 2024 12:54 PM IST

சத்தீஷ்காரில் சுரங்க பகுதிக்கு வந்த நக்சலைட்டுகள் சிலர், ஓட்டுநர்களை கீழே இறக்கி விட்டு 4 லாரிகளை தீ வைத்து எரித்தனர்.

நாராயண்பூர்,

சத்தீஷ்காரில் அடர்ந்த வன பகுதிகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகளவில் காணப்படுகிறது. காடுகளில் பதுங்கி கொண்டு பயிற்சி பெறும் இவர்கள் அடிக்கடி கிராமத்திற்குள் புகுந்து, ஊர் தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி விடுவார்கள்.

சமூக நலன்களுக்கான போராளிகளாக தங்களை அடையாளப்படுத்தி, காட்டிக்கொள்ளும் இவர்கள், கிராமவாசிகள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதுடன், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகளை வைப்பது உள்ளிட்ட தாக்குதல்களிலும் ஈடுபடுவது வழக்கம். போலீசாரிடம் காட்டி கொடுப்பவர்களை வீட்டில் இருந்து தெருவுக்கு இழுத்து வந்து, கொடூர தாக்குதல் நடத்தி படுகொலை செய்து விட்டு தப்பி செல்வார்கள்.

இந்நிலையில், சத்தீஷ்காரில் நாராயண்பூர் மாவட்டத்தில், சுரங்கத்தில் இருந்து இரும்பு தாது எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு நக்சலைட்டுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், இரும்பு தாதுக்களை ஏற்றி கொண்டு சுரங்கத்தில் இருந்து 4 லாரிகள் புறப்பட தயாராக இருந்தன. அப்போது, அந்த பகுதிக்கு வந்த நக்சலைட்டுகள் சிலர், ஓட்டுநர்களை கீழே இறக்கி விட்டு 4 லாரிகளை தீ வைத்து எரித்தனர். எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்றபோது, லாரிகள் முற்றிலும் எரிந்து போய் இருந்தன. நாராயண்பூர் மாவட்டம் பஸ்தார் மக்களவை தொகுதிக்கு உட்பட்டது. வருகிற 19-ந்தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலின்போது இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும்.

மேலும் செய்திகள்