பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: அரசியல் கட்சிகள் கண்டனம்
|பி.பி.சி. நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி,
பி.பி.சி. நிறுவன அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டர் தளத்தில், 'மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தொலைதூரத்தில் இருந்து வரும் விமர்சனக் குரல்களை நெரிப்பதற்காக வெட்கக்கேடான மற்றும் மன்னிக்கப்படாத பழிவாங்கலுடன் செயல்படுகிறது' என கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளையும் ஊடகங்களையும் தாக்குவதற்கு விசாரணை நிறுவனங்களைப் பயன்படுத்தினால் எந்த ஜனநாயகமும் வாழ முடியாது எனக்கூறியுள்ள கார்கே, மக்கள் இதை எதிர்ப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், 'அதானி விவகாரத்தில் நாங்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கேட்டுக்கொண்டு இருக்கிறோம், ஆனால் அரசு பி.பி.சி.க்கு எதிராக களமிறங்கி இருக்கிறது. அழிவு நெருங்கும்போது ஒருவரின் அறிவு அவரது நலனுக்கு எதிராக செயல்படும்' என தெரிவித்தார்.
கழுத்தை நெரிக்கும் செயல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் தளத்தில், 'முதலில் பி.பி.சி. ஆவணப்படங்களுக்கு தடை. அதானி நிறுவன முறைகேடுகளுக்கு விசாரணை இல்லை. தற்போது பி.பி.சி. நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை. இந்தியா: ஜனநாயகத்தின் தாய்தானா?' என சாடியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. பினோய் விஸ்வம், வருமான வரித்துறை சோதனை என்பது ஒரு அச்சுறுத்தும் அரசின் உண்மையின் கழுத்தை நெரிக்கும் முயற்சியாகும் என தெரிவித்து உள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ்
இந்த சோதனையை சாடியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, அதானி நிறுவனங்களுக்கு எதிராக செபி, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை சோதனை நடத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைப்போல பி.பி.சி. நிறுவனத்தில் நடந்த சோதனைக்கு எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு கவலை வெளியிட்டு உள்ளது.
அரசின் கொள்கைகள் அல்லது ஆளும் கட்சியை விமர்சிக்கும் பத்திரிகை நிறுவனங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தும் போக்கின் தொடர்ச்சியாக இந்த சோதனை உள்ளது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பா.ஜனதா தாக்கு
இதற்கிடையே இந்தியாவுக்கு எதிராக விஷமுள்ள அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக பி.பி.சி. நிறுவனம் மீது பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளையும் குறை கூறியுள்ளது.
இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், 'பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலக அளவில் முன்னணியில் நடைபோடுவதை பல சக்திகள் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற கட்சிகளும் இந்தியாவின் இந்த எழுச்சியின் வலியை உணர்கிறார்கள்' என தெரிவித்தார்.