'மக்களவையில் அரசாங்கத்தின் மீது கடுமையான எதிர்ப்பை எதிர்கட்சிகள் வெளிப்படுத்துவோம்' - ஜெய்ராம் ரமேஷ்
|மக்களவையில் எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் 'இந்தியா' கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க. எம்.பி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் உள்பட 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் மீதம் இருக்கும் நான்கு நாட்களில் எதிர்கட்சிகளின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினோம். மக்களவையில் அரசாங்கத்தின் மீது கடுமையான எதிர்ப்பை எதிர்கட்சிகள் வெளிப்படுத்துவோம்.
மக்களவை தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் மற்றும் தனிப்பட்ட முறையிலும் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்துள்ளன. இதை எதிர்கட்சிகள் தினந்தோறும் பிரதமருக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம்" என்று தெரிவித்தார்.