பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
|பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் தொடர்பாக கடந்த 3-ந்தேதி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும், 5-ந்தேதிக்கு (நேற்று காலை) வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அதானி பங்குச்சந்தை முறைகேடு புகாரில் கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள், கருப்பு சட்டை அணிந்து வந்து சபாநாயகர்கள் மேஜை முன்பு, நின்று முழக்கமிட்டனர்.
இதனால், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியதுமே, நேற்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 2 மணிக்கு இரு அவைகளும் தொடங்கிய நிலையில், அதானி பங்குச்சந்தை முறைகேடு புகாரில் கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை தொடங்கியது. எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், இன்றும் கருப்பு உடை அணிந்து வந்து இருந்தனர். அவை நடவடிக்கை தொடங்கியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கோஷம் எழுப்பினர்.
ஒரு சிலர், அவையின் மைய பகுதிக்கு சென்றனர். சிலர் அவை தலைவரை நோக்கி சென்று கோஷமிட்டனர். இதனால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்றும் அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இதன்பின் உறுப்பினர்கள் அவையில் இருந்து கலைந்து சென்றனர்.
நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் தொடங்கியதில் இருந்தே, இரு அவைகளும் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அதானி பங்குச்சந்தை முறைகேடு புகாரில் கூட்டுக்குழு விசாரணை கோரி வலியுறுத்தியும், இங்கிலாந்தில் ராகுல் காந்தி பேசிய விசயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியான பா.ஜ.க.வும் இரு அவைகளிலும் கோஷம் எழுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.