ஒற்றுமையை வெளிப்படுத்தும் முன் எதிர்க்கட்சிகள் தங்கள் நோக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும் - மாயாவதி
|பாட்னா கூட்டம், இதயங்கள் இணைவதற்கு பதிலாக, கை குலுக்கும் நிகழ்ச்சியாகவே இருக்கும் என்று மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ,
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளை விமர்சித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக பிரச்சினைகளை எழுப்பி வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதை மனதில் கொண்டு, மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கு முன்பு, அந்த எதிர்க்கட்சிகள் தங்களது நோக்கத்தை தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். எவ்வளவு காலத்துக்குத்தான் தேன் ஒழுக பேசுவீர்கள்?
அக்கறை இல்லை
வெற்றி பெறுவதற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகள் முக்கியமானவை. ஆனால், எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை பார்த்தால், அவர்கள் இதில் தீவிரமாகவோ, அக்கறையுடனோ இருப்பதாக தெரியவில்லை.
எவற்றுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற தெளிவு இல்லாமல், நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டுவர முடியுமா?
கை குலுக்குவோம்
வறுமை, பணவீக்கம், வேலையின்மை, சாதி ஏற்றத்தாழ்வு நிலவும் நாட்டில், அம்பேத்கர் வகுத்து கொடுத்த சமத்துவமான, மனிதாபிமான அரசியல் சட்டத்தை முறையாக அமல்படுத்தும் திறன், பா.ஜனதாவுக்கோ, காங்கிரசுக்கோ இல்லை.
இத்தகைய சூழ்நிலையில், பாட்னா கூட்டம், 'இதயங்கள் இணைந்தாலும், இணையாவிட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து கை குலுக்குவோம்' என்பது போல்தான் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் புறக்கணிப்பு குறித்து ஐக்கிய ஜனதாதளம் தலைமை செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ''பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பே விடுக்கவில்லை'' என்று கூறினார்.