எதிர்கட்சிகள் இணைந்து நாடாளுமன்றத்தில் இருந்து விஜய்சவுக் வரை ஊர்வலம்
|நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 19 எதிர்க்கட்சிகள் ஊர்வலம் நடத்தின.
புதுடெல்லி,
நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கூட்டாக ஊர்வலம் சென்றன. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய்சவுக் வரை ஊர்வலம் நடந்தது.
கையில் தேசிய கொடி ஏந்தி, ஊர்வலமாக சென்றனர். முந்தைய ஊர்வலங்களில் பங்கேற்காத, திரிணாமுல் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி, சமாஜ்வாடி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களும் பங்கேற்றனர். மொத்தம் 19 எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
விஜய்சவுக்கை அடைந்த பிறகு, ஒரு கிளப்பில் 19 கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-
"மத்திய அரசு, ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட்டை வெறும் 12 நிமிடங்களில் நிறைவேற்றியது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் சபையை முடக்குவதாக கூறுகிறது.
ஆளுங்கட்சிதான் அமளியை உருவாக்கியது. நாங்கள் ஏதேனும் கோரிக்கை விடுத்தாலோ, நோட்டீஸ் அளித்தாலோ, எங்களை பேச அனுமதிப்பது இல்லை. எனது 52 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் இதுபோன்ற அணுகுமுறையை இப்போதுதான் பார்க்கிறேன். இதற்கு முன்பு இப்படி நடந்தது இல்லை. ஜனநாயகம் பற்றி அரசு நிறைய பேசுகிறது. ஆனால் அதுபோல் நடப்பதில்லை.
கூட்டத்தொடரை வீணடிப்பதுதான் பா.ஜனதாவின் நோக்கமாக இருந்தது. இதே நிலை நீடித்தால், ஜனநாயகம் ஒழித்து கட்டப்படும். நாடு சர்வாதிகாரத்தை நோக்கி மெல்ல மெல்ல சென்று விடும்.
19 எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை எழுப்பினோம். இரண்டரை ஆண்டுகளில், அதானி சொத்து மதிப்பு எப்படி ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்தது என்று கேட்டோம். ஆனால் அரசு பதில் அளிக்கவில்லை. அதை திசைதிருப்ப ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரச்சினை செய்தனர்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்தால், அதுதொடர்பான ஆவணங்களை எதிர்க்கட்சிகளும் பார்க்க முடியும் என்பதால் அந்த கோரிக்கை விடுத்தோம். ஆனால் பா.ஜனதா பயப்படுகிறது. கூட்டுக்குழுவில் பா.ஜனதா உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது ஏன் பயப்படுகிறீர்கள்? அதானியுடன் தொடர்பு இருப்பதே காரணம்.
ஒலியின் வேகத்தில் ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்தார்கள். ஆனால், அம்ரேலி தொகுதி பா.ஜனதா எம்.பி.க்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், 16 நாட்களுக்கு பிறகு கூட தகுதிநீக்கம் செய்யவில்லை.
ராகுல்காந்தி தகுதிநீக்க பிரச்சினையில் ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி. இந்த ஒற்றுமையை தொடர்ந்து பின்பற்றுவோம். இனிவரும் தேர்தல்களில் சேர்ந்து போட்டியிடுவோம்.
2024 தேர்தலில் என்னென்ன பிரச்சினைகளை எழுப்புவது என்று எல்லா கட்சிகளின் தலைவர்களும் கூடிப்பேசி முடிவு செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு எங்களது முக்கிய செயல்திட்டமாக இருக்கும்."
இவ்வாறு அவர் கூறினார்.