< Back
தேசிய செய்திகள்
400 தொகுதிகளுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் - பிரதமர் மோடி நம்பிக்கை
தேசிய செய்திகள்

400 தொகுதிகளுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் - பிரதமர் மோடி நம்பிக்கை

தினத்தந்தி
|
5 Feb 2024 5:30 PM IST

தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் அனைவரும் ஜனாதிபதிக்கு பின்னால் அணிவகுத்து வந்தோம். இந்தியா விடுதலை பெற்றபோது, அதற்கு சாட்சியாக விளங்கிய இந்த செங்கோல் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. புதிய நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு செங்கோல் முன் நின்று வழிகாட்டுகிறது.

ஜனாதிபதியின் உரை மாபெரும் உண்மைகளை சொல்லியது. நாடு எந்த வேகத்தில் வளர்ச்சி பெறுகிறதோ அதை ஜனாதிபதி உரை வெளிப்படுத்தி உள்ளது. நான்கு தூண்கள் பற்றி ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். நான்கு தூண்கள் மூலம் நாடு வேகமாக வலுவடையும்.

தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. மறுபடியும் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பீர்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் நீண்ட நாள் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பர் என எனக்கு தெளிவாகிறது. எதிர்க்கட்சிகளின் தற்போதைய நிலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம். ஒரே குடும்பம் கட்சி நடத்துவது தான் குடும்ப அரசியல். ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் காங்கிரசை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலரின் முக்கியத்துவம் குறையக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

நாங்கள் பேசுவது எங்களின் சாதனையை அல்ல நாட்டின் சாதனையை பற்றி பேசுகிறோம். உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்; இது மோடியின் கேரண்டி. நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். மதத்தின் அடிப்படையில் சமுதாயத்தை எதிர்க்கட்சிகள் பிளவுபடுத்த வேண்டாம்.

நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளுக்கும் மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். பா.ஜ.க. மட்டும் 370 தொகுதிகளில் வெற்றி பெறும். பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அடித்தளமிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்