< Back
தேசிய செய்திகள்
அதானி விவகாரத்தில் இரு அவைகளும் மீண்டும் முடக்கம்: நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சிகள் போராட்டம்
தேசிய செய்திகள்

அதானி விவகாரத்தில் இரு அவைகளும் மீண்டும் முடக்கம்: நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

தினத்தந்தி
|
7 Feb 2023 3:59 AM IST

நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

அதானி நிறுவனங்கள் விவகாரத்தில் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்றும் அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. குறிப்பாக இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

அத்துடன் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசுகளையும் வழங்கி உள்ளன.

இந்த கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இது 3-வது நாளாக நேற்றும் நீடித்தது.

சபாநாயகர் கண்டனம்

அந்தவகையில் 2 நாள் விடுமுறைக்குப்பின் மக்களவை நேற்று காலையில் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அதானி விவகாரம் குறித்து விசாரணை வேண்டும் என வலியுறுத்தினர்.

'அதானி அரசு வெட்கக்கேடு, வெட்கக்கேடு' என அவர்கள் கோஷமிட்டதால் அவையில் பெரும் குழப்பம் நிலவியது.

எதிர்க்கட்சியினரின் இந்த கோஷத்துக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

கோஷங்களை எழுப்புவது அவையின் கண்ணியத்துக்கு எதிரானது எனக்கூறிய ஓம் பிர்லா, மக்கள் தங்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்காக உங்களை தேர்ந்தெடுத்தால், நீங்கள் அது குறித்த விவாதங்களில் ஆர்வம் காட்டவிலை என குற்றம் சாட்டினார்.

சபாநாயகரின் இந்த கோரிக்கையை காதில் வாங்காத எதிர்க்கட்சிகள் தங்கள் கோஷங்களை தொடர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

மக்களவை ஒத்திவைப்பு

பின்னர் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் போர்க்கோலத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். தாங்கள் விரும்பும் கருத்துகளை அப்போது கூறலாம் எனவும், அதற்கு அரசு பதிலளிக்கும் என்றும் கூறினார்.

ஆனால் அவரது வேண்டுகோளை நிராகரித்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டவாறே இருந்தனர்.

இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை முடக்கம்

இதற்கிடையே அதானி பங்குகள் விவகாரம் மாநிலங்களவையையும் உலுக்கியது. காலையில் அவை கூடியபோதும், இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் வழங்கிய 10 ஒத்திவைப்பு நோட்டீசுகளை நிராகரித்து விட்டதாக அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் அறிவித்தார்.

இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அவையில் பயங்கர அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் முதலில் பிற்பகல் 2 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் அவையின் வழக்கமான அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை

முன்னதாக அதானி விவகாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகளை வகுப்பதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காலையில் கூடி விவாதித்தன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் அறையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி, ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி, இடதுசாரிகள் என பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மல்லிகார்ஜூன கார்கே

இந்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பிய அவர்கள், அது தொடர்பான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, 'நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதானி விவகாரம் முதலில் விவாதத்துக்கு எடுக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்பதே எங்களின் முதல் கோரிக்கை. ஆனால் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அரசு விரும்பவில்லை' என குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இந்த போராட்டத்தால் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்