எதிர்க்கட்சிகள் இணைவு: சோனியா காந்தியுடன் ஆலோசனை செய்ய நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் முடிவு
|தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் இணைவு பற்றி விவாதிக்க டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் இன்று சந்திக்க உள்ளனர்.
புதுடெல்லி,
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிக்கான கூட்டணியை ஒன்றிணைக்கும் தீவிர பணியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார். அவர் பிரதமர் வேட்பாளராகும் நோக்கில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் என கூறப்படுகிறது.
எனினும், தனக்கு பிரதமராகும் விருப்பம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற அவர், பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். பீகாரில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்ட பின்னர், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாகி உள்ளார்.
இந்த நிலையில், நிதிஷ் குமார் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் டெல்லியில் இன்று மாலை 6 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசுகின்றனர்.
இந்த சந்திப்பில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது தவிர்த்து வேறு சில விசயங்களும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி ராஷ்டீரிய ஜனதா தளம் வெளியிட்டுள்ள செய்தியில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, பல்வேறு காரணங்களுக்காகவும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இதன்படி, சோனியா காந்தியிடம் இருந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பற்றிய ஓர் உடன்பாடு எட்டப்படுவதற்கான ஒப்புதலை பெறுவதற்கான உறுதிமொழியை எங்களது தலைமை கேட்டு பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, காங்கிரசில் இருந்து அரசியல் ரீதியாக சற்று தொலைவில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து, கூட்டணியில் சேரும்படி அழைப்பதற்காக எதிர்க்கட்சிகளை அணுகுவதற்கான உரிமையையும் தங்களுக்கு அளிக்கும்படி இருவரும் சோனியா காந்தியிடம் கேட்க உள்ளனர்.
இதனால், இன்றைய சந்திப்பு வெற்றி பெற்று விட்டால், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி விரைவுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.