< Back
தேசிய செய்திகள்
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு 24 கட்சிகளுக்கு அழைப்பு: சோனியா காந்தி பங்கேற்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு 24 கட்சிகளுக்கு அழைப்பு: சோனியா காந்தி பங்கேற்பு

தினத்தந்தி
|
13 July 2023 5:21 AM IST

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் இந்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டார்.

இந்த கட்சிகளின் முதலாவது ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 23-ந்தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் என முக்கியமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க 16 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரியை தவிர மீதமுள்ள 15 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

2 நாட்கள் நடக்கிறது

இந்த கூட்டத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணி தொடர்பான தொடக்க கட்ட ஆலோசனைகள் நடந்தன. அத்துடன் அடுத்தகட்ட கூட்டத்தை சிம்லாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த கூட்டத்தை பெங்களூருவில் நடத்துவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அதன்படி வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெங்களூருவில் இந்த கூட்டம் நடக்கிறது.

முதல் நாளான 17-ந்தேதி இரவு விருந்துடன் கூடிய கூட்டமும், 2-வது நாளான 18-ந்தேதி வழக்கமான ஆலோசனையும் நடைபெறும் என மூத்த எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள்

அந்தவகையில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ராஷ்ட்ரீய சோஷலிச கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மாணி) போன்ற கட்சிகளுக்கும் இந்தமுறை அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 17-ந்தேதி மாலையில் நடைபெறும் ஆலோசனையில் அவர் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகா துணை முதல்-மந்திரியுமான சிவகுமார் கூறுகையில், 'பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு சோனியாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி அவர் பங்கேற்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது' என தெரிவித்தார்.

ஆம் ஆத்மி மிரட்டல்

பெங்களூருவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அதிகரிப்பது தொடர்பாக விரிவான திட்டம் வகுக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக பா.ஜனதாவுக்கு எதிராக நாடு முழுவதும் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்டத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டை பெங்களூரு கூட்டத்துக்கு முன் தெரிவிக்க வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தி உள்ளது.

அவ்வாறு பொதுவெளியில் தெரிவிக்காவிட்டால், பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்றும் கூறியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் இந்த மிரட்டல் எதிர்க்கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்