< Back
தேசிய செய்திகள்
துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஜூலை 17-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை
தேசிய செய்திகள்

துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஜூலை 17-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

தினத்தந்தி
|
14 July 2022 9:22 AM IST

துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6, 2022 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

புதுடெல்லி,

இந்தியாவின் 15 வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2017இல் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10, 2022 அன்றுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து, இந்தியாவின் 16வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6, 2022 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று தொடங்கி ஜூலை 19, 2022 வரை சமர்ப்பிக்கலாம்.

இந்நிலையில், வரும் 17ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விவாதிக்க உள்ளதாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அனுமதி அளித்துள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளை அணுகும் பொறுப்பு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மலிகார்ஜுன் கார்கேவுக்கு காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது.

"காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்த வேட்பாளரும் இல்லை. அனைத்துக் கட்சிகளும் (எதிர்க்கட்சி) வேட்பாளராக யாரைத் தேர்வு செய்தாலும் நாங்கள் அவருடன் நிற்போம் என்று எங்கள் கட்சித் தலைவர் தெளிவாகக் கூறியுள்ளார்" என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.

மேலும் செய்திகள்