< Back
தேசிய செய்திகள்
சரிவை நோக்கி செல்லும் இந்தியா கூட்டணி - ஐக்கிய ஜனதா தளம் விமர்சனம்
தேசிய செய்திகள்

சரிவை நோக்கி செல்லும் இந்தியா கூட்டணி - ஐக்கிய ஜனதா தளம் விமர்சனம்

தினத்தந்தி
|
27 Jan 2024 4:20 PM IST

இந்தியா கூட்டணியை தொடங்குவதில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சியாக தனது பொறுப்பை நிறைவேற்ற தவறிவிட்டதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.

பாட்னா,

பீகாரில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழ்நிலையில், காங்கிரசின் "பொறுப்பற்ற" நடத்தையால், எதிர்க்கட்சிக் கூட்டணியான இந்தியா, சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கே.சி. தியாகி, "பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கடும் முயற்சிகளுக்குப் பின் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். அந்த முயற்சி பலனளித்தது.

இந்தியா கூட்டணியை தொடங்குவதில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சியாக தனது பொறுப்பை நிறைவேற்ற தவறிவிட்டது. காங்கிரசின் இந்த உணர்ச்சியற்ற, பொறுப்பற்ற அணுகுமுறையால் இந்தியா கூட்டணி சரிவை நோக்கி செல்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பதிலாக மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை திணிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் கூட்டணித் தலைவர்கள் கவலையில் இருக்கிறார்கள். மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜியின் அறிவிப்பின் மூலம் சர்ச்சைகள் அதிகமாகி விட்டன. பா.ஜனதா மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகியவை கைகோர்க்கும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. வலுவான எதிர்கட்சியான இந்தியா கூட்டணிஎன்ற நிதிஷ் குமாரின் கனவை காங்கிரஸ் சிதைத்துவிட்டது" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்