< Back
தேசிய செய்திகள்
சீன எல்லை மோதல் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க மறுப்பு: எதிர்க்கட்சிகள் கூண்டோடு புறக்கணிப்பு
தேசிய செய்திகள்

சீன எல்லை மோதல் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க மறுப்பு: எதிர்க்கட்சிகள் கூண்டோடு புறக்கணிப்பு

தினத்தந்தி
|
23 Dec 2022 3:41 AM IST

சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால், மாநிலங்களவையை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக சபையின் மையப்பகுதிக்கு சென்றனர். இந்திய-சீன படைகளிடையே எல்லையில் நடந்த மோதல் குறித்து விவாதம் நடத்துமாறு வலியுறுத்தினர்.

மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அவை முன்னவர் பியூஷ் கோயல், பீகார் மாநிலத்தை அவமதிக்கும்வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்ததாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால், சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர், சீன மோதல் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுத்து விட்டார். இருக்கைக்கு செல்லுமாறு அவர்களை கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் செல்லவில்லை. திரும்ப திரும்ப சொல்லிய போதிலும் அவர்கள் கேட்கவில்லை.

புறக்கணிப்பு

இதற்கிடையே, நேற்று முழுவதும் மாநிலங்களவை கூட்டத்தை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தன.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் கூறியதாவது:-

சீன அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று முதல் நாளில் இருந்தே நாங்கள் கேட்டு வருகிறோம். ஆனால், மத்திய அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. எனவே, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இன்றைய (நேற்று) கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.

மக்களவை

மக்களவையிலும் சீன அத்துமீறல் பிரச்சினை எதிரொலித்தது. அப்பிரச்சினை குறித்து விவாதிக்கக்கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், முதலில் பகல் 12 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

பகல் 12 மணிக்கு சபை கூடியபோது, மீண்டும் அமளி நடந்தது. அதற்கிடையே, நிலைக்குழு அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, ''வெள்ளிக்கிழமையுடன் கூட்டத்தொடர் முடிவடைய இருப்பதால், முக்கியமான அலுவல்களை நடத்த விடுங்கள். காங்கிரஸ் ஆட்சியில், இதுபோன்ற உணர்வுபூர்வமான பிரச்சினைகள் குறித்த விவாதம் அனுமதிக்கப்பட்டது இல்லை. எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டன'' என்று கூறினார்.

ஒத்திவைப்பு

சபாநாயகர் இருக்கையில் இருந்த ராஜேந்திர அகர்வாலும் உறுப்பினர்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அவர்கள் ஏற்காததால், சபையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்தார்.

2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, கொரோனா நிலவரம் குறித்தும், மத்திய அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிக்கை தாக்கல் செய்தார். அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டபடி இருந்தனர்.

அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் விவாதத்துக்கு எடுத்த சமயத்திலும் அமளி தொடர்ந்தது. இதனால், சபை மாலை 4 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. அதனால், சபாநாயகர் இருக்கையில் இருந்த கிரித் சோலங்கி, மாலை 4.30 மணிவரை சபையை ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்