நாடாளுமன்றத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கையை முன்வைத்து 'அதானி, அதானி' என எதிர்க்கட்சியினர் கோஷம்
|பட்ஜெட் உரையின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் ‘ஜோடோ, ஜோடோ, பாரத் ஜோடோ’ என கோஷங்களை எழுப்பினர்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட் உரையை வாசித்த போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர். இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பதில் கோஷம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
அந்தவகையில் வருமான வரி உச்சவரம்பு உள்ளிட்ட திட்டங்களை அறிவிக்கும் போது, மேஜையை தட்டி 'மோடி, மோடி' என ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். முன்னதாக பிரதமர் மோடி அவைக்கு வந்தபோது 'பாரத் மாதா கி ஜே' என அவர்கள் முழங்கினர்.
அதேநேரம் பட்ஜெட் உரையின்போது பா.ஜனதா உறுப்பினர்களுக்கு போட்டியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் 'ஜோடோ, ஜோடோ, பாரத் ஜோடோ' என கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவைக்கு வந்தபோது இந்த முழக்கத்தை உரத்த குரலில் எழுப்பினர்.
இதைப்போல 50 புதிய விமான நிலையங்களுக்கான அறிவிப்பு வெளியானபோது, ஹிண்டன்பர்க் அறிக்கையை முன்வைத்து 'அதானி, அதானி' எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இந்த கோஷங்களால் அவையில் பலத்த சலசலப்பு ஏற்பட்டது.