'அதானி விவகாரத்தை மழைக்கால கூட்டத் தொடரிலும் கிளப்புவோம்' - காங்கிரஸ் மிரட்டல்
|அதானி விவகாரத்தை மழைக்கால கூட்டத் தொடரிலும் கிளப்புவோம் என்று காங்கிரஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
புதுடெல்லி,
சமீபத்திய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அதானி குழும முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை கிளப்பி, சபையை முடக்கியது முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை அடுத்த கூட்டத் தொடரிலும் கிளப்புவோம் என்று காங்கிரஸ் கூறி உள்ளது. காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "வரும் மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது. அதில் எங்கள் முதல் கோரிக்கையே மோடி-அதானி கூட்டணி முறைகேட்டில் (மோடானி முறைகேடு) நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவதுதான். பின்னர் அது பற்றிய புத்தகத்தை வெளியிடுவோம். அதில் அதானி விவகாரம் குறித்து 100 கேள்விகள் எழுப்புவோம். அதற்கு மோடி பதிலளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்" என்றார்.