உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டு சூடானில் சிக்கித் தவித்த மேலும் 754 பேர் இந்தியா வந்தனர்
|உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டு சூடானில் இருந்து மேலும் 754 பேர் நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர்.
புதுடெல்லி,
உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டு சூடானில் இருந்து மேலும் 754 பேர் நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர். இதன் மூலம் சூடானில் இருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுப்போர் வெடித்து உள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டுப்போர் உக்கிரம் அடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்களை அந்தந்த நாடுகள் தொடர்ந்து மீட்டு வருகின்றன.
அதன்படி சூடானில் வசித்து வரும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கு ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதற்காக விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் களமிறக்கப்பட்டு உள்ளன.
உள்நாட்டுப்போர் உக்கிரமாக நடந்து வரும் தலைநகர் கார்தூம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கிருந்து அவர்கள் விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
சூடானில் இருந்து இவ்வாறு மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் அடங்கிய முதல் குழுவினர் கடந்த 26-ந்தேதி டெல்லி வந்தடைந்தனர். அடுத்ததாக 246 இந்தியர்களை விமானப்படை விமானம் நேற்று முன்தினம் ஜெட்டாவில் இருந்து மும்பை கொண்டு வந்து சேர்த்தது.
இதைத்தொடர்ந்து மற்றொரு விமானப்படையின் சி.17 குளோப்மாஸ்டர் விமானத்தில் 392 இந்தியர்கள் அடங்கிய 3-வது குழுவினர் நேற்று டெல்லியை அடைந்தனர். இதைப்போல மேலும் 362 பேரை கொண்ட 4-வது குழுவுடன் மற்றொரு விமானம் நேற்று பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தது.
இதன் மூலம் சூடானில் சிக்கியிருந்த 1,360 இந்தியர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் இந்த ஆபரேஷன் காவேரி நடவடிக்கைக்காக ஜெட்டா, சூடான் துறைமுகம் மற்றும் கார்தூமில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றில் தனித்தனி கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்களுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து தொடர்பு கொண்டு இந்த பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதனால் இந்த மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருவதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.