வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
|வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
பெங்களூரு:
வைகுண்ட ஏகாதசி
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி நேற்று கொண்டாட்டப்பட்டது. வைகுண்ட ஏகாதசியையொட்டி பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக்கில் உள்ள ஸ்ரீகைலாச வைகுண்ட மகாசேத்ரா கோவில், மகாலட்சுமி லே-அவுட்டில் மரி திருப்பதி சீனிவாசா கோவில், வயாலிகாவலில் உள்ள திருமலை திருப்பதி கோவில், அத்திகுப்பேயில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில்.
கலாசிபாளையாவில் உள்ள கோட்டே வெங்கடரமணசாமி கோவில், மாகடி ரோடு எம்.ஜி. ரெயில்வே காலனியில் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமி, இஸ்கான் கோவில் உள்பட பெங்களூரு நகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், மண்டியாவில் உள்ள வரதராஜ சாமி உள்பட கர்நாடகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
சொர்க்க வாசல் திறப்பு
மேலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில்களில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அந்த சொர்க்க வாசல் வழியாக அலங்கரிக்கப்பட்ட பக்தர்கள் நடந்து சென்றனர். மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகங்கள் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில்களில் பூஜைகள் நடந்த போது பக்தர்கள் கோவிந்தா.... கோவிந்தா.... என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது.
பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக கோவில் நிர்வாகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் பெருமாள் கோவில்களை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒரு சில கோவில்களில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருந்ததாக பக்தர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.