9 ஆண்டுகளில் மாதத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடக்கம்: பிரதமர் மோடி பேச்சு
|ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் கூடுதலான ஏழை நோயாளிகள் பலன் அடைந்து உள்ளனர் என பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியுள்ளார்.
சிரோஹி,
ராஜஸ்தானில் அபு சாலையில் உள்ள பிரம்ம குமாரிகளின் சாந்திவனம் வளாகத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி சாரிடபிள் குளோபல் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்நிகழ்ச்சியின்போது நடந்த கலாசார நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார்.
இதன்பின் அவர் கூட்டத்தினரிடையே பேசும்போது, அமுத காலத்தில் அனைத்து சமூக மற்றும் மத அமைப்புகள் பெரிய அளவில் பங்காற்ற வேண்டும் என குறிப்பிட்டார். நம்முடைய கடமைகள் எல்லாவற்றையும் நிறைவாக செய்ய வேண்டும் என்று நாட்டின் ஒவ்வொரு குடிமக்களையும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினால், அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் ஏழைகளுக்கான கதவுகளை திறந்து விட செய்யப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் கூடுதலான ஏழை நோயாளிகள் பலன் அடைந்து உள்ளனர். இதனால், அவர்கள் ரூ.80 ஆயிரம் கோடி சேமிக்க இத்திட்டம் உதவியுள்ளது. இதேபோன்று, ஜன ஆசாதி திட்டத்தினால், ஏழை மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த நோயாளிகள் ரூ.20 ஆயிரம் வரை சேமித்து உள்ளனர் என்று கூறியுள்ளார்.
அவர் தனது உரையின்போது, நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான வளர்ச்சியை சுட்டி காட்டியதுடன், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறையையும் குறிப்பிட்டார்.
9 ஆண்டுகளில் சராசரியாக மாதத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது என அவர் பேசியுள்ளார். இதன்படி, 350-க்கும் கூடுதலான மருத்துவ கல்லூரிகளை கடந்த 9 ஆண்டுகளில் அரசு தொடங்கி உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.