காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே பொது விவாதம் நடத்தலாம் - சசி தரூர் விருப்பம்
|காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பொது விவாதம் நடத்த சசி தரூர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேயுடன் நேரடியாக மோதுகிற முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கும், பா.ஜ.க. அரசு எந்திரத்தை கையாள்வதற்கும் ஏற்ற வகையில் சில முன்னுரிமை திட்டங்களை கோடிட்டு காட்டி இருக்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவிவாதம் நடத்தலாம் என்ற யோசனையை திறந்த மனதுடன் ஏற்கிறேன்.
எங்களுக்கு இடையே சித்தாந்த ரீதியில் வேறுபாடுகள் இல்லை. மாறாக நாங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள நோக்கங்களை அடைவதற்கு எப்படி செல்ல போகிறோம் என்பதுதான் இங்கே கேள்வி.
அனைவரையும் ஈர்க்கும்
வேட்புமனு தாக்கல் கடைசி நாளுக்கும், வாக்குப்பதிவு நாளுக்கும் இடையே ஏறத்தாழ 2½ வாரங்கள்தான் இடைவெளி உள்ளது. எனவே, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை (வாக்காளர்கள்) சென்றடைவது என்பது நடைமுறையில், பயண ரீதியில் மிகக் கடினமானது.
அந்த வகையில், ஒரு பொது மேடையில் வேட்பாளர்கள் தோன்றி கட்சிக்கான தங்களது யோசனைகளை, தொலைநோக்குப்பார்வையை ஆக்கபூர்வமான விதத்தில் பரிமாறிக்கொள்ளலாம். இது பிரதிநிதிகளுக்கு சென்றடைய வசதியாக இருக்கும்.
அதே நேரத்தில், ஓட்டு போடாதவர்களை- அதாவது மற்ற காங்கிரஸ் தொண்டர்களையும், ஊடகங்களையும், பொதுமக்களையும் இது நிச்சயமாக அதிகளவில் கவரும்.
வேட்பாளர்கள் இடையேயான கருத்து பரிமாற்றம், கட்சிக்கும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
உதாரணத்துக்கு இங்கிலாந்தில் நடந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் போட்டியை கூறலாம். தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக தலைவர் பதவிக்கு டஜனுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வெளிப்பட்டதை பார்த்தோம். அதே போன்ற ஒரு சூழலை பிரதிபலிப்பது காங்கிரஸ் கட்சியின் மீதான ஆர்வத்தை தேசிய அளவில் அதிகரிக்கும். அதிக வாக்காளர்கள் கட்சியை நோக்கி வர ஊக்குவிக்கும்.
நேரு-காந்தி குடும்பம்
நேரு-காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைமை பதவிக்கு வந்தால், அந்த குடும்பம் ஒரு முக்கிய இடத்தை தொடர்ந்து பிடிக்குமா என கேட்கிறீர்கள்.
நேரு-காந்தி குடும்பம் வெளிப்படையாகவே ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. அது எப்போதும் தொடரும். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இதயங்களில் அவர்களுக்கு சிறப்பான இடம் உண்டு என்று அவர் கூறினார்.