< Back
தேசிய செய்திகள்
உம்மன் சாண்டி நினைவு தினம்: ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோ
தேசிய செய்திகள்

உம்மன் சாண்டி நினைவு தினம்: ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோ

தினத்தந்தி
|
18 July 2024 1:53 PM IST

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி விடியோ வெளியிட்டுள்ளார்.

கேரளா,

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவருமான மறைந்த உம்மன் சாண்டியின் முதலாம்-ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உம்மன் சாண்டி, கேரள மாநிலத்தின் முதல்-மந்திரியாக 2004-2006 மற்றும் 2011- 2016 ஆகிய ஆண்டுகளில் பொறுப்பில் இருந்துள்ளார். மேலும், கேரளாவில், புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியின் நிரந்தர எம்.எல்.ஏ. போலவே செயலாற்றியவர். மேலும் 1970 முதல் 2023 வரையில் புதுப்பள்ளி எம்.எல்.ஏ.வாக உம்மன் சாண்டி இருந்துள்ளார். உம்மன் சாண்டி கடந்தாண்டு (2023) ஜூலை 18ஆம் தேதி வயது முதிர்வு உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் இயற்கை எய்தினார்.

இந்நிலையில் உம்மன் சாண்டியின் முதலாம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், "மக்களின் உண்மையான தலைவரான உம்மன் சாண்டி, தனது வாழ்நாளை கேரள மக்களின் சேவைக்காக தளராத அர்ப்பணிப்புடன் செலவிட்டார். அவரது பயணமும் இந்திய தேசிய காங்கிரசின் மரபும் பின்னிப் பிணைந்துள்ளது. ஒரு மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும், முதல்-மந்திரியாகவும் ஒரு ஜனநாயகத்தின் மாண்பை உள்ளடக்கி, பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் உள்ளவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவரது வாழ்க்கை தொலைநோக்கு, அர்ப்பணிப்பு மற்றும் அக்கறையுடன் தலைமைத்துவத்திற்கு ஒரு நற்சான்றாக நிற்கிறது. உம்மன் சாண்டியின் நினைவு நாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை ஒரு இரக்கமுள்ள, பணிவான, அர்ப்பணிப்புள்ள மக்கள் தலைவராகக் கொண்டாட வேண்டிய கேரள வரலாற்றில் அழிக்க முடியாத ஓர் பகுதியாகும்" என்று அதில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்