< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் திடீரென அதிகரித்த வெங்காய விலை
தேசிய செய்திகள்

டெல்லியில் திடீரென அதிகரித்த வெங்காய விலை

தினத்தந்தி
|
28 Oct 2023 9:52 PM IST

டெல்லியில் வெங்காயத்தின் விலை நவராத்திரிக்கு பின்னர் திடீரென அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

நாட்டில் தக்காளியின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இல்லத்தரசிகளை அச்சமூட்டியது. பின்னர், மெல்ல விலை சரிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த நிலையில், டெல்லியில் வெங்காயத்தின் விலை திடீரென நவராத்திரிக்கு பின்னர் அதிகரித்து காணப்படுகிறது. முந்தின விலையை விட இரட்டைப்படைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுபற்றி வெங்காய வியாபாரிகள் கூறும்போது, சரக்கு விநியோக பற்றாக்குறையே இந்த திடீர் வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.

அவர்கள் தொடர்ந்து கூறும்போது, நவராத்திரிக்கு முன்பு ஒரு கிலோ ரூ.25 முதல் 30 வரை விற்பனையானது. அது 3 நாட்களில் ரூ.55 முதல் ரூ.60 வரை விலை உயர்ந்து உள்ளது. சந்தைகளில் அவை ரூ.65 முதல் 70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என கூறினர்.

இதே நிலை நீடிக்கும்போது, ஒரு கிலோ வெங்காயம் விரைவில் ரூ.100 வரை உயர கூடும் என கடைக்காரர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலங்களில் இருந்து, அறுவடையான வெங்காயங்கள் வந்து சேர்வதற்கு காலதாமதம் ஆகியுள்ளன. இதனால், வெங்காயத்தின் சில்லரை விலை கிலோ ரூ.60 வரை விற்கப்படுகிறது என நுகர்வோர் விவகார அமைச்சக தகவல் தெரிவிக்கின்றது.

இதுவரை 5.07 லட்சம் மெட்ரிக் டன்கள் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. மற்றொரு 3 லட்சம் மெட்ரிக் டன்கள் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதனால், வருகிற நாட்களில் வெங்காயத்தின் விலை சரிவடையும் என அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்