தார்வாரில் வருவாய்த்துறை அதிகாரிக்கு ஓராண்டு சிறை
|வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வருவாய்த்துைற அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
உப்பள்ளி-
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வருவாய்த்துைற அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வருவாய்த்துறை அதிகாரி
பெலகாவி மாவட்டம் சகித்தூர் பகுதியை சேர்ந்தவர் நூர்அகமதுகான். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நூர் அகமதுகான் சகித்தூர் வருவாய்த்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்த 2010-ம் ஆண்டு நூர் அகமதுகான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார் வந்தது.
அதன்பேரில், போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, நூர் அகமதுகான் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை லோக் அயுக்தா போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக நூர் அகமதுகான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை தார்வார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து நூர் அகமதுகான் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஓராண்டு சிறை
இதுதொடர்பாக வழக்கு தார்வார் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. தார்வார் லோக் அயுக்தா போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி என்.சுப்பரமணியா நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், வருமானத்திற்கு அதிகமாக நூர் அகமதுகான் சொத்து சேர்த்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ. 25 ஆயிரமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் எஸ்.எஸ்.சிவல்லி வாதாடினார்.