ஒருதலை காதல்... வேறொருவருடன் திருமணம்.. ஆசைக்கு இணங்க மறுத்த புதுப்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்
|பெண்ணின் கழுத்து, முதுகு, வயிற்று பகுதிகளில் கத்தியால் வாலிபர் சரமாரியாக குத்தினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா சிம்மனஹட்டி அருகே கொல்லரஹட்டியை சேர்ந்தவர் கட்டப்பா (வயது 29). இவரது வீட்டு அருகே 27 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டில் வசித்து வந்த அந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இளம்பெண் இருந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட கட்டப்பா, வீடு புகுந்து தனது ஆசைக்கு இணங்குமாறு கூறி அவரிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவரை தாக்கிய கட்டப்பா, கற்பழிக்க முயன்றுள்ளார்.
அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அவரது வீட்டுக்கு திரண்டு வந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த கட்டப்பா, தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்து, முதுகு, வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் அந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். வீட்டுக்கு திரண்டு வந்த பொதுமக்கள், கட்டப்பாவை பிடித்து தர்ம-அடி கொடுத்தனர்.
பின்னர் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய புதுப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஜகலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தாவணகெரே மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பிடிபட்ட கட்டப்பாவை பொதுமக்கள், ஜகலூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், கட்டப்பா, அந்த புதுப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததும், ஏற்கனவே 2 முறை இதேப்போல் வீடு புகுந்து அந்த பெண்ணை தனது காம இச்சைக்கு அடைய முயன்றதும், தற்போது திருமணமாகி கணவர் வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு திரும்பிய நிலையில் மீண்டும் கட்டப்பா அந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஜகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.